தமிழ் சினிமாவில் தனிபெரும் இயக்குநர் பீம்சிங், 1950முதல் 70 வரை அவரின் தாக்கம் அப்படி இருந்தது. சிவாஜி கணேசன் எனும் அந்த அற்புத நடிகனுக்கு மிகபெரும் சவாலை கொடுத்து மாபெரும் நடிகனாக மிளிர‌ பட்டை தீட்டியதிலும் அவருக்கு பங்கு உண்டு பாகபிரிவினை தொடங்கி பாசமலர், பாவமனிப்பு என தமிழ்


சினிமாவின் தலைசிறந்த படைப்புகளை கொடுத்தவர், இன்றுவரை எல்லா இயக்குநரிடமும் அவரின் பாதிப்பு உண்டு. அரசியல் போலவே சினிமாவிலும் வாரிசுகள் உண்டு. ஆனால் மிக சிறந்த கலைஞர்கள் தங்கள் வாரிசுகள் சினிமாவில் இருக்கட்டும் ஆனால் விரும்பிய துறையில் இருக்கட்டும் என விட்டுவிடுவார்கள்


ஆம் கலை என்பது ஊட்டி வளர்வது அல்லது, ரத்தத்தில் கலந்திருப்பது அப்படி பீம்சிங்கும் தன் வாரிசுகள் இருவரை தமிழ்திரைக்கு தந்தார் ஒருவர் பி.லெனின் இன்னொருவர் பி.கண்ணன் அந்த பி.லெனின் எடிட்டிங் எனும் வித்தையில் தன்னிகரற்று நின்றார், தமிழக சினிமா உலகின் தலைசிறந்த எடிட்டவர் அவர்தான்


பி.கண்ணன் மிக சிறந்த ஒளிப்பதிவாளர். ஆனால் மிக நெருக்கமான இயக்குநராக பாரதிராஜாதான் இருந்தார், சில கலைஞங்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் வரும், இப்பொழுது அதை ஒத்த அலைவரிசை என்பார்கள், உண்மையான அர்த்தம் ஆத்மார்த்தமாக நெருங்குவது இருவரும் ஒரே மனதோடு ஒன்றுபட்டு ஒரு விஷயத்தை ரசித்தால்


அது வரும், மிக சிலருக்கே அது வாய்க்கும் கண்ணதாசன் விஸ்வநாதன் என மிக சிலர் மனமே அப்படி இணையும் பாரதிராஜா மனமும் கண்ணன் மனமும் அப்படி இணைந்தது, கண்ணன் சினிமா வாழ்வின் 80% படங்கள் பாரதிராஜாவுடையவை, அத்தனையும் முத்துக்கள் அந்த கிராமத்து எளிய மனிதர்களாகட்டும், அந்த மாடு மேயும்


ஆற்றங்கரையாகட்டும், இடிந்த மண்கட்டைகள் நிரம்பிய கிராமத்து தெருக்களாகட்டும். அந்த அழகை அப்படியே அள்ளிகொண்டு வந்து திரையில் காட்டியவர் கண்ணன். பாரதிராஜா கிராமவாசி ஆனால் கண்ணன் நகரவாசி, பின் எப்படி கிராமபடங்களில் இணையமுடிந்ததென்றால் அதுதான் கண்ணனின் கலைமனது.


இயக்குநருக்கு ஒளிபதிவாளர்தான் கண், அவ்வகையில் அவர் பாரதிராஜாவுக்கு கண்ணாக இருந்தார். அந்த கண்ணன் காலமாகிவிட்டார், 80 வயதான அவருக்கு காலம் முடிந்தது. பாரதி ராஜா தன் மூன்றாம் கண்ணை இழந்திருக்கின்றார் மாபெரும் ஜாம்பவான் பீம்சிங் ஓய்ந்த 1975க்கு பின் களத்துக்கு வந்த கண்ணன் 2011 வரை


களத்தில் இருந்தார், மகா அற்புதமான படங்களை அவர் கொடுத்தார் அவர் தந்தைக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகளை காணமுடியும் அவருக்கு பாசமலர் இவருக்கு கிழக்கு சீமையிலே அவருக்கு பாவமன்னிப்பு இவருக்கு வேதம் புதிது அவருக்கு பாலும் பழமும் இவருக்கு கடலோர கவிதைகள் என


இன்னும் ஏராளம் சொல்லிகொண்டே செல்லலாம் சிவாஜி எனும் ஜாம்பவானுக்கு அவர் தந்தை ஏகபட்ட மகுடங்களை சூட்ட முதல் மரியாதை எனும் மாபெரும் மகுடத்தை சூட்டினார் கண்ணன் பீம்சிங்கின் தொடக்க படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி எனும் வகையில் கருணாநிதி பீம்சிங் மேல் தனிபாசம் கொண்டிருந்தார்,


உளியின் ஓசை படத்துக்கு பீம்சிங் வந்தது அப்படித்தான். 1978ல் தகப்பனின் படத்தில் ஜெயகாந்தன் கதையில் பணியாற்ற தொடங்கிய கண்ணன், அலைகள் ஓய்வதிலை படத்தில் பாரதிராஜாவோடு இணைந்தார். அந்த அலை ஓயாமல் அடித்து கொண்டே இருந்தது, பாரதிராஜா எனும் பெரும் கலைஞன் எழுப்பிய அலைகளில் கண்ணனுக்கும்


பெரும் பங்கு இருந்தது. அந்த அற்புத ஒளிப்பதிவாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் பீம்சிங் மகனாக பிறந்து, சிவாஜி மடியில் தவழ்ந்து, ஜெயகாந்தன் கரம்பிடித்து வளர்ந்து,பாரதிராஜா எனும் மகத்தான ரசிகனுடன் இணைந்த அவரின் வாழ்வு ரசனையுள்ள வாழ்வாகவே முடிந்தது.


சிவாஜிக்கு பீம்சிங் போல, பாரதிராஜாவுக்கு கண்ணன் இருந்தார் பீம்சிங் இயக்குராக மாபெரும் முத்திரை பதித்து, தன் மகன் மூலம் மிக சிறந்த ஒளிபதிவாளர் வடிவில் வந்தார் என்பதை வரலாறு குறித்துகொண்டது. நீண்ட பாரம்பரியம் கொண்ட நதி மறைந்துவிட்டது, ஆனாலும் அது கொடுத்த கொடைகள்


அழியா கல் ஆலயங்களாக நின்றுகொண்டே இருக்கும். கண்ணன் குடும்பத்துக்கும் , தன் கண்ணை இழந்த பாரதிராஜாவுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்


Top